Saturday, May 29, 2010

பூவோடு பேசிய தருணங்கள்

ஒரு நாள் காலை, சாலையில் பயணிக்கையில் பலரை காண்கிறேன். எல்லோரின் மனதிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி ததும்பியது. என்னுள்ளும் மகிழ்ச்சி இருந்த போதிலும், என் மனதில் ஓர் ஆச்சர்யம் தோன்றியது. ஆகா என்ன அழகு, எல்லோரும் இவ்வளவு சந்தோஷமாக செல்கிறார்களே! அவர்களின் மகிழ்சிக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கையில், நல்ல வாசனைகள் மூக்கை துளைத்தன. சற்றே எட்டி பார்த்தேன். சாலையின் இருமருங்கிலும் பூக்களின் மாநாடு. ( A Garden)

ஓ இவைகள் தாம், இம்மக்களின் ஆனந்தத்திற்கு காரணமோ என எண்ணத் தோன்றியது. என் கவனம் சற்று அப்பூக்களின் மீது திரும்பியது. அத்துனை பூக்களும் அப்படி ஒரு ஆனந்தமாய் சிரித்து கொண்டிருந்தன. நானும் அம்மாநாட்டில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். எல்லா பூக்களும் தத்தம் வேளைகளில் மும்பறமாய் இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அதில் ஒரு பூ என்னை நோக்கி புன்முறுவல் புரிவதை கண்டேன். எனக்கோ மனதினுள் அப்படி ஓர் பேரானந்தம். அப்பூவின் அருகில் சென்று கேட்டேன். நீ என்னை பார்த்தா சிரித்தாய் என்று. அப்பூ மீண்டும் புன்முறுவலோடு மகிழ்ந்ததை என்னால் உணர முடிந்தது. இதை உறுதி படுத்த, நான் அங்கே வந்த தென்றலை கேட்டேன். தென்றல் சொன்னது, உன் கேள்விக்கு இப்பூ தலை ஆட்டியதை நான் நான் பார்த்தேன் என்று. என் பூ, ஆம் என்னோடு பேசிய பூ சிரித்ததை போல் வேறெந்த பூவும் சிரித்ததை நான் பார்த்ததில்லை.

இப்படி ஒரு அழகை இதுவரை நான் கண்டதில்லை என்றேன். அப்பூ வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆம் அப்பூவின் இயல்பான நிறம் சற்று சிவப்பு என்றாலும், இப்போது சிறு நிற மாறுபாட்டை என்னால் காண முடிந்தது. மேலும் அது வெட்கத்தில் இலைகளால் தனது முகத்தை மறைக்க முயற்சி செய்தது.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படிருந்தது. அதில் என் பூவும், ஆம் என்னோடு பேசிய பூவும் பங்கேற்றிருந்தது. பூக்கள் அசைந்தாலே அழகுதான். அவைகள் அசைந்தாடினால்... அதை சொல்லவா வேண்டும். அங்கு வந்த வண்டுகளெல்லாம் தனது ரீங்காரத்தின் மூலம் இசை அமைத்த விதம் இன்னும் அருமை. அத்துணை பூக்களும் அவ்வளவு அழகாய் நடனம் புரிந்தன. அந்த குழு நடனத்தில், என் பூ மட்டும் , ஆம் என்னோடு பேசிய பூ மட்டும் எனக்கு தனியாக தெரிந்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்த ஆட்ட பாட்டங்களை காண மேக கூட்டங்களும் சற்று கீழே இறங்கி வந்தன. அது சற்றே மாலை நேரம். மேக கூட்டத்திற்கு துணையாக மழை துளிகளும் வந்திருந்தன. மழை துளிகள் என் பூவோடு சேர்த்து, ஆம் என்னோடு பேசிய பூவோடு சேர்த்து, எல்லா பூக்களையும் தலையில் தட்டி கொடுத்தன. எனக்கு அப்படி ஒரு கோபம் மழை துளிகளின் மேல். ஆம் மழை துளிகள் பாராட்டியதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. :-) அது போகட்டும்.


கருமேகங்கள் சற்றே கலைந்து, இருள் சூழ தொடங்கியது. ஆம் முகங்கள் சிவக்க தொடங்கின. இம்முறை சிவந்தது என் பூவின் முகம் அல்ல. அங்கிருந்த இரு கதிரவன்களின் முகம். அந்த மாலை நேர கதிரவன் சிவந்ததிற்கு காரணம் என்னவோ எனக்கு தெரிய வில்லை. ஆனால் இந்த பூவோடு பேசிய கதிரவனின் முகம் சிவந்ததிற்க்கான காரணம் உங்களுக்கும் தெரியும்.

நான் வீடு திரும்பும் நேரம் நெருங்கியது. என் பூ இதை அறிந்து கொண்டது போலும். ஆமாம் மழை துளிகளோடு, கண்ணீர் துளிகளும் என் பூவின் கன்னங்களில் வழிந்தோடியது. அவற்றில் கண்ணீர் துளிகளை மட்டும் துடைத்து விட்டு, என் பூவின், ஆம் என்னோடு பேசிய பூவின் அருகிலிருந்து மெதுவாய் நகரத் தொடங்கினேன் சூழ்நிலைகளால். ஆம் அந்த மாலை நேர சூழலைச் சொன்னேன்.

என் கையை பிடித்து என் பூ இழுத்தது. ஆம் நான் கை வீசும் போது, மாலை நேர காற்றும் பலமாய் வீசியதலோ என்னவோ!



















என்ன இவைகளில் எந்த பூ என் பூ என்று, அதாவது என்னோடு பேசிய பூ என்று கேட்கிறீர்களா..?
என் பூ, இந்த பூக்களை எல்லாம் விட அழகான பூ. இங்கிருக்கும் பூக்களை தன் தலையில் சூடும் பூ. :-)